Tuesday, December 23, 2008

மீண்டும் மகளாகிறாள்(5)

வளின் கணவன் பெயர் குமார்.ஆனால் அவரை அவர் வீட்டில் டக்சன் என்றே அழைக்கின்றார்கள்.அவரது வேலை நிமித்தமாக ரதியும் கொழும்புக்கே வரவேண்டியதாயிற்று.அவளைப் பொறுத்தமட்டில் விருப்பு வெறுப்பற்ற நிலையில் எதுவுமே புரியாமல் ஏகாந்தமாய் எங்கோ தன்னைத் தனித்து விடப்பட்டது போலவே உணர்ந்தாள்.ஆண்டவனைத் தவிர யாருமே துணை இல்லை என்பதாய் நினைத்தாள்.சுற்றம் சூழல் உறவுகள் பாஷை எல்லாமே அவளுக்குப் புதிதாய் இருந்தது.பயமாக இருந்தது ரதிக்கு.கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போலப் பரிதவித்தாள்.அந்தக் கிராமத்துச் சூழல் எங்கே!இந்த நகரத்துப் பரபரப்பு எங்கே!

நரகமாய் வாழ்வு ஆனதாய் தவித்தாள்.தெரிந்த முகங்கள் என்று எவருமே இல்லை.சகோதரர்களின் பிரிவு ஒரு புறம்.வானொலி கேட்கும் வாய்ப்புக்கூட இல்லாமலே இருந்தது.எங்கோ காற்றில் மிதந்து வரும் பாடல்கள் சிலசமயம் யாரோ கொஞ்சத் தூரங்களில் தமிழ் பேசக்கூடியவர்கள் இருக்கிறார்கள் என்பதைச்
சொல்லிப் போனது.கணவன்,மாமியார்,ஒரு பாட்டி,மிச்சம் அவரது இரண்டு சகோதரிகள்,ஐந்து சகோதரர்கள் என வீடு நிறைய மனிதர்கள் உலாவினார்களே தவிர உற்றான்மையாய் இருப்பது போல் தெரியவில்லை.அவர்களுக்குத் தமிழ் தெரியவில்லை.பாட்டி கொஞ்சம் கொழும்புத் தமிழ் பேசினா.கணவன் குமாரும் மாமியார்ரும் குழந்தைகள் பேசுவதுபோலத் திக்கித் திணறித் தமிழில் ஏதோ ஒன்றைப் பேசிக்கொண்டிருந்தார்கள்.சிலசமயத்தில் அவர்கள் அனபாய் கதைக்கிறார்களா அல்லது மிரட்டுகிறார்களா என்றுகூடத் தெரியாமல் மிரண்டு நிற்பாள்.

எவரும் வீட்டில் இருக்கும் நேரம் குறைவாகவே இருந்தது.அத்தனை மச்சினர்களும் படிப்பு வேலை என்று போய்விடுவார்கள்.மச்சாள்மார் இருவரில் ஒருவர் திருமணம் ஆனவர்.எனவே அவர் தன் கணவர் வீட்டில்.மற்றையவர் வேலைக்குப் போனால் இரவு நேரம்தான் வீடு திரும்புகிறார்.பாட்டி அயல் வீடுகளுக்கு.மாமியைக் காணவே இல்லை.அவள் கேட்டுக் கொள்வதும் இல்லை.அவர்கள் வாழும் சூழ்நிலை பழக்க வழக்கங்கள் இப்படித்தானோ தெரியாது என்று அவள் கணவன் வரும்வரை யன்னலில் நின்று வேடிக்கை பார்ப்பதும் நன்றாக பகல் நித்திரை கொள்வதும் மற்றும்படி பழைய நினைவுகளை அசை போடுவதும் தனக்குப் பிடித்த பாடல்களைத் தானே பாடுவதுமாக அவள் பொழுது மெல்ல மெல்லக் கழிந்து கரையும்.குமாருக்கு நன்றாகச் சிங்களப் பாடல்கள் பாடத்தெரியும்.அதோடு மெட்லின் புல்லாங்குழல் போன்ற வாத்தியங்கள் வாசிக்கும் திறமையும் இருந்தது.அதிலும் சிலசமயங்கள் மனம் லயித்து ரசித்திருப்பாள்.

இவ்வளவுக்கு இடையிலும் அவள் கொஞ்சம் அதிஸ்டசாலி.அவள் அப்பா இரத்தினபுரியில் ஒரு பாடசாலை அதிபராக இருப்பதால்இஇரத்தினபுரிக்கும் கொழும்பு-தெகிவளைக்கும் மிகத் தூரமான இடைவெளி இல்லாததால் மாதத்தில் ஒருமுறையோ இருமுறையோ வந்து போனார்.அன்றைய கால கட்டங்களில் இன்றைய சூழ்நிலைபோல தொலைபேசி வசதிகள் இல்லைதானே.இதற்கிடையில் அம்மாவும் தம்பியும் ஒருமுறை வந்து மூன்று நாட்கள் தங்கிப் போனார்கள்.என்வே ரதி ஓரளவு சந்தோஷமாகவே இருந்ததாகச் சொல்ல முடியும்.அவளது கணவன் குமாருக்கும் வயது 22 தான்.எனவே அவரும் குடும்பம் மனைவி என்கிற பொறுப்புகளற்ற குழந்தைத்தனமாகவே இருந்தார்.மாமி அன்பாகவே இருக்கிறா எனப் புரிந்தது ரதிக்கு.ரதியை வெளியே எங்காவது கூட்டிப் போய் வா என்று எப்போதும் குமாரிடம் சொல்லுவா.தனியாகச்
சமைக்க விடமாட்டா.யாழ்ப்பாணச் சமையல் இல்லாமல் தங்கள் சமையல் முறையில் புதிது புதிதாகச் சமைத்துக் கொடுப்பா.குமாரது அப்பா இவருக்குப் பதினாறு வயதாயிருக்கும்போது காலமாகிவிட்டிருந்தார்.
எனவே குமார் அவரது அம்மா அம்மாவின் சொந்தங்கள் அவர்களது பண்பாடு கலந்த சூழலிலேயே வளர்ந்து வந்திருக்கிறார்.

இப்படியே ஒரு ஆறு மாதகாலம் போயிருக்கும்.ரதி ஒருநாள் குமாரிடம் மெதுவாக"நீங்க வேலையை யாழ்ப்பாணத்துக்கு மாத்திக்கொண்டு வரலாம்தானே.இங்க எனக்கு எல்லாம் புதுசா பயமா இருக்கு.யாராச்சும் என்னாவது கதைச்சா ஒண்டும் விளங்கவும் மாட்டுதாம்.நீங்களும் காலேல போனா பின்னேரம்தான் வாறிங்கள்.மாமியும் மற்றவையளும் வீட்டில இருக்கவும் மாட்டினமாம்."என்று தன் மனக்குறைகளை நிறைகளை வேதனைகளை மெல்ல மெல்ல எடுத்துச் சொல்ல ஆரம்பித்தாள்.
(இன்னும் வருவாள்)


ஹேமா(சுவிஸ்)

7 comments:

Muniappan Pakkangal said...

Rathi without radio,and no person inside the house & alone,language not understandable it is interesting.

SUREஷ் said...

//சிலசமயத்தில் அவர்கள் அனபாய் கதைக்கிறார்களா அல்லது மிரட்டுகிறார்களா என்றுகூடத் தெரியாமல் மிரண்டு நிற்பாள்.//


மொழி நன்றாக தெரிந்தாலும் கூட இப்படித்தான் பெரும்பாலான மருமகள்களுக்கு இருக்கும்

கபீஷ் said...

ம், கதை நல்லா போகுது, கொஞ்சமா எழுதிட்டீங்க, இந்த பகுதி :-(

கவின் said...

\\அந்தக் கிராமத்துச் சூழல் எங்கே!இந்த நகரத்துப் பரபரப்பு எங்கே!\\

Ravee (இரவீ ) said...

//அந்தக் கிராமத்துச் சூழல் எங்கே!இந்த நகரத்துப் பரபரப்பு எங்கே!//
இந்த சூழலை நான் அனுபவித்தவன் என்ற முறையில்... கதையில் ஈடுபாடு , எதிர்பார்ப்பு அதிகரிச்சுகிட்டே இருக்கு ...

பிரச்சனை இங்க தான் ஆரம்பிக்க போகுதா? அப்படீன்னு சென்ற பதிவில் நினைத்தேன் - இந்த பதிவின் முடிவிலும் அதே எதிர்பார்ப்பு?

கமல் said...

பாதைகள் மாறுவதும் பயணங்கள் மாறுவதும் இயல்பு தானே??? தொடருங்கள்...

தமிழன்-கறுப்பி... said...

பிறகென்ன நடந்தது ஹேமா?!
அத்தியாயங்கள் சின்னதாக இருந்ததில் ஒரே மூச்சில் முழுவதையும் படித்து முடித்தேன் இப்பொழுது...

நல்லா எழுதுறியள்..

தொடருங்கோ வலிந்து கலகலப்பாய் எழுத வேண்டம் என்று எழுத வேண்டிய அவசியம் இல்லiயே ஹேமா...எதை எழுத வேண்டும் போல இருக்கிறதோ அதை எழுதுவோம் பின்னர் எல்லாவற்றையும் எழுதப்பழகுவோம்...

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP