Tuesday, December 16, 2008

மீண்டும் மகளாகிறாள்(4)

தன்பிறகு அவள் பெரியம்மா இன்னும் தொடர்கிறாள்."அவன் ஒரு உதவாக்கரை.கோயில் மேளமும் தட்டிக்கொண்டு தொழில் துறையிலயும் உருப்படியில்ல.உங்க பெடியளோட சுத்திக்கொண்டு நல்ல தண்ணியும் அடிச்சுக்கோண்டு உருப்படாம சுத்திக்கொண்டு திரியுது காவாலியா"இன்னும் என்னென்னவோ அம்மாவுக்கு மோகனைப் பற்றி அலசிவிட்டு புதிதாய் ஒன்றை அம்மாவின் மனதில் விதைக்கத் தொடங்கினாள்.

தன் மூத மகள் திருமணம்செய்த இடத்தில்,அந்தக் குடும்பத்தில் அதாவது கொழும்பில் அழகான பெடியன் ஒருவன் இருப்பதாகவும் தாய் சிங்களப் பெண் என்றும் தப்பனார் எங்கள் சொந்தக்காரர் என்றும் பெடியன் இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தில் பணி புரிந்து கொண்டிருப்பதாகவும் அம்மாவிடம் சொல்லி"நீ உன்ர அவரோடயும் பேசிக்கதைச்சு யோசிச்சு வை.எனக்கெண்டா நல்லது எண்டு படுது.அப்பிடி உங்களுக்குப் பிடிச்சுது எண்டா நான் அவையளை ஒருக்கா யாழ்ப்பாணம் வரச்சொல்றன்.பெடியனையும் கூட்டிவரச்சொல்றன்.எல்லாருமா சேர்ந்து பேசி முடிவெடுக்கலாம்தானே"என்று புயல் ஒன்றைக் கிளப்பிவிட்டுப் போய்விட்டா.

ரதி எந்தவிதமான தவறுமே செய்யவில்லை.ஆனால் தண்டிக்கப்படுகிறாள்.
"நீ படிச்சுக் கிழிச்சது போதும்"என்று அடுத்தநாளே படிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது.அவளும் எவ்வளவோ அழுது கெஞ்சிப் பார்த்துவிட்டாள்.
முடிவு இல்லவே இல்லை என்றாகிவிட்டது.ரதியின் அப்பாவைப் பொறுத்தமட்டில் குடும்பம்தான் அவர் உலகம்.அம்மா என்ன முடிவு எடுத்தாலும் குடும்பத்தில் நன்மைக்கே என்றிருப்பவர்.எனவே இங்கு அம்மாவின் முடிவே முடிவாய் இருக்கும்.ரதியின் மனதில் நிறையத் தத்தளிப்புக்கள்.மோகன் மீது அளவில்லாக் கோபம்.யாரிடமும் மனம்விட்டுக்கூட அழமுடியா அவள் அவலம்.

மாதங்கள் 3-4 வெறுமையாகக் கழிந்திருக்கும்.பெண் பார்க்க என்று கொழும்பில் இருந்து ரதிக்குப் பேசவிருக்கும் அவரும் அவர் தாயாரும் அவர் தம்பியாரும் வந்து இறங்கினார்கள்.எண்ணி ஒரு கிழமைதான்.ரதிக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.யாரிடமும் கேட்டு அறியவும் முடியவில்லை.வீட்டிலோ தம்பியும் தங்கைகளும் சிறியவர்கள்.அம்மா மட்டும் அடிக்கடி வெளியில் போய் வந்து கொண்டிருந்தா.ரதிக்கு ஓரளவு ஊகிக்க முடிந்தாலும் என்னதான் நடக்கிறது என்பது கேள்விக்குறியாகவே இருந்து கொண்டிருந்தது.நரகமாய் நொடிகள்கூட நகர்ந்துகொண்டு இருக்க அப்பாவும் வீடு வந்து சேர்ந்துவிட்டார்.அவளுக்கு ஏதோ நடக்கப் போகிறது என்று நிறைவாகப் புரியத் தொடங்கியது.

கொழும்பில் இருந்து வந்தவர் மாப்பிள்ளை என்றாகிவிட்டார்.வீட்டில் தம்பியும் தங்கைகளும் அத்தான் என்று கதைபேசத் தொடங்கிவிட்டார்கள்.
"மாப்பிள்ளைக்கு ஒரு கிழமைதானாம் விடுமுறை.அத்ற்கிடையில் திமணம் முடித்துக்கொண்டு வேலைக்குப் போய்விட வேண்டுமாம்."பெரியவர்கள் எல்லோருமாகச் சேர்ந்து முடிவெடுத்துவிட்டார்கள்.
ரதியை யாரும் சம்பிரதாயத்துக்குக்கூட சீண்டி அவள் மனவிருப்பத்தைக் கேட்பாரேயில்லை.மாப்பிள்ளை அத்தான் என்கிறார்கள்.ரதிக்கோ அவர் எப்படி இருப்பார் என்றுகூடத் தெரியாமல் மனதில் முட்டிய வேதனையோடு களை இழந்து நடமாடிக்கொண்டிருந்தாள்.
அவள் கவலையெல்லாம் திருமணம் வேண்டாம் படிக்க வேணும் என்பதாகவே இருந்தது.யார் அவள் மனதைப் படிக்க நினைத்திருந்தார்கள்.அவர்களுக்கு அவகாசமும் இல்லை.நேரமுமில்லை.
கல்யாணப் பரபரப்புத் தொடங்கிவிட்டது.

வீட்டில்.பலகாரச் சூடு.புடவை,நகை வாங்கல்.இதற்கிடையில் மாப்பிள்ளையும் தாயாரும் வந்தும் போனார்கள்.அக்கறையில்லாத் தேவையில்லா தேவையாய் இருந்த நாட்கள் ரதிக்கு அது.வந்து போனார்களே தவிர ரதிக்கு அவர் பெயர்கூடத் தெரியவில்லை.இன்னும் ஒரு விஷயமும் கூட.அவர்களுக்குத் தமிழ் பேசத் தெரியாது.ஊமைக்கும் ஊமைக்கும் திருமணமாகத் திகதியும் குறித்தாயிற்று.ரதிக்கு அக்டோபரில் அதாவது வருகின்ற அக்டோபரில்தான் வயது பதினெட்டு ஆகிறது.ஆனால் அதற்கு முன் டிசம்பரிலேயே பதினேழு வயதிலேயே அவள் பெரியம்மா ஏற்பாடு செய்து எல்லோராலும் தீர்மானிக்கப்பட்ட,ரதிக்கு யார்...எவர்...என்ன பெயர்...எப்படியிருப்பார் என்று தெரியாத அந்தக் கொழும்புப் பெடியனோடு அமைதியாகக் கோவிலில் திருமணம் நடந்தேறியது.(இன்னும் வருவாள்)

ஹேமா(சுவிஸ்)

13 comments:

Anonymous said...

ஹாய் ஹேமா! எப்பிடி இருக்கிறீங்கள்?? ஒரு நல்ல சேதி சொல்லட்டுமா??? வேண்டாமா?? ஏதோ ஒரு மாதிரி நீங்கள் தந்த சினிமாத் தொடருக்கு விடை கண்டு பிடிச்சிட்டேன். இல்லை அந்த தொடருக்கு பதில் எழுதிட்டேன். இதாங்க நல்ல சேதி.!

Anonymous said...

அவர்களுக்குத் தமிழ் பேசத் தெரியாது.ஊமைக்கும் ஊமைக்கும் திருமணமாகத் திகதியும் குறித்தாயிற்று.//

ஹேமா ம்......ம்...நான் நினைத்ததற்கு மாறாக கதையின் முடிவை மாற்றி விட்டீர்கள். தொடருங்கள்... உண்மையான அன்பிற்கும், காதலுக்கும் மொழி முக்கியம் இல்லை!

Anonymous said...

the life story going nicely,what is going to happen to Rathi?

Anonymous said...

ஹேமா, said...
கமல்,அப்புக்குட்டித் தாத்தாவுக்கு ஏன் தேவையில்லாத வேலை.
பேரப்பிள்ளைக்கு ஏதாவது ஸ்டைய்லா ஒரு பேர் கிடைக்கேல்லையோ?இங்க சுவிஸ் ல பிறந்ததால சுவிஸன்,சுவிஸி எண்டு வைக்கினம்.அப்போ அவுஸ்திரேலியா எண்டா அவுஸன்,அவுஸி எண்டு.
நல்லாத்தானே இருக்கு.கூப்பிடவும் சுகம்.பாருங்கோ இப்ப கமலேஸ்வரன்,
ஹேமவதி எண்டா எவ்வளவு கஸ்டம்.வெளிநாட்டு விசர் பிடிச்சு சனங்கள்அலையுது.அப்புக்குட்டியும்...

வணக்கம் ஹேமா அக்கா! எப்பிடி இருக்கிறீங்கள்??? என்ன எனக்கும் விசரோ?? எங்கட சனத்துக்குத் தான் விசர் அக்கா. அது சரி அப்ப கனடாவில பிள்ளை பிறந்தால் ''கனடன்' கனடி என்றும் , நியீஸிலான்ட் என்றால் நியூசன், நியூசி என்றும் பிரான்ஸ் என்றால் பிரஞ்சன், பிரஞ்சி என்றும் பெயர் வைத்தால் உந்தப் பேருக்கு அர்த்தம் என்ன என்று கேட்டால் அந்தப் பிள்ளையள் சொல்லுமோ??? அப்ப சுவிஸன், சுவிஸி என்று பெயர் வைச்சவை ஒரு எழுத்தை மாற்றி வைத்தால் சுவிச்சன், சுவிச்சி என்று கூப்பிடலாம். அப்பிடிச் சுவிச்சன், சுவிச்சி என்று பெயர் இருந்தால் தாய், தகப்பன் அடிக்கடி சுவிச் ஜ நிப்பாட்டோணும் என்றால் அந்தப் பிள்ளையளைக் கூப்பிடால் போதும் தானே. ஓ....நீங்கள் நல்லாத்தான் யோசிக்கிறீங்கள். அப்ப அந்த பெற்றோர் நல்லா அர்த்தம் விளங்கித் தானே பேர் வைச்சிருக்கீனம். நீங்கள் சொல்லுறதைப் பார்த்தால் லண்டனில பிள்ள பிறந்தால் லண்டன் என்று பொடியனுக்குப் பேர் வைக்கலாம். பொம்பிளைப் பிள்ளைக்கு ''லண்டி'' என்று பேர் வைசால் அந்தப் பேருக்கு என்ன விளக்கம்???? எனக்கு இப்ப பேர் வேணும்.....உடனே சொல்லுங்கோ.

Anonymous said...

கதை நல்லாப் போகுது, சோகமான முடிவா இருக்குமோ?

Anonymous said...

கமல் நல்ல செய்திக்கு நன்றி.
ஒரு மாதிரி முடிச்.... சாச்சா?

Anonymous said...

கமல்,காதலுக்கு மொழி வேண்டாம்.
சமைச்சுக் குடுக்க என்ன பிடிக்கும்,
எத்தனை மணிக்கு வருவிங்க வீட்டுக்கு எண்டு கேக்க மொழி வேணுமோ இல்லையோ!பரிதாபம்.

Anonymous said...

முனியப்பன் இன்னும் கொஞ்சக் கதைதான்.பார்த்துக் கொண்டே......யிருங்க.

முனியப்பன் தமிழ்ல எழுதுங்க.
அழகாயிருக்குமே.ஏன் கஸ்டம்ன்னா விடுங்க.இதுவே போதும்.

Anonymous said...

கமல் இஞ்ச பாருங்கோ,என்ன அப்புக்குட்டி தாத்தாவுக்கு லண்டு,
லண்டிக்கு விளக்கம் வேணுமாம்.
எங்கயாச்சும் சொல்லி ஒரு அகராதி பதிப்பிச்சுக் குடுங்கோ தயவு செய்து.

எங்கட வருங்காலப் பிள்ளையள் கொஞ்சக்காலத்தில மொழியைத்தான் மறந்துபோகுங்கள்.பிறகு தாங்கள் எங்கிருந்து வந்தோம் என்கிற வேர்களையும் மறந்துபோயிடுங்கள்.
பேர்களிலயாவது கண்டுபிடிக்கலாம் எண்டா அதுவும் இனி அவ்வளவுதான்.
லண்டு,பேஸி(Bern ல பிறந்த பிள்ளையாம்.அதுதான் பேஸி)எண்ட பெயரோட இருக்கிற ஒருத்தர் எந்த நாட்டுக்காரராய் இருப்பார்.
குழப்பம்தான்.அப்புக்குட்டி தாத்தா பேஸி OK தானே.நல்ல பெயர்.

Anonymous said...

கபீஷ்,பொறுமையா கவனமா தொடர்ந்தும் கதையைப் படிக்கவேணும்.முடிவு...?

Anonymous said...

இன்றே நாலுமுறை தேடி பாத்துட்டேன் - பாகம் ௫ காக,
நல்லா இருக்குற "கதையல்ல நிஜத்தை" இப்டியா நிறுத்தி காக்க வைப்பது ?

Anonymous said...

இரவீ,காத்திருங்க கொஞ்சம்.உங்க சோம்பேறித்தனம் எனக்கும் தொத்திக்கிச்சோ!கிறிஸ்மஸ் நேரமாதலால் கொஞ்சம் வேலைகள் அதிகம்.அதுதான்.இடையில் சில சமயம் வேறு ஏதாவது பதிவும் வரும்.

Anonymous said...

வேறு என்ன செய்ய !!!
காத்திருக்கோம்... காத்திருக்கோம்... காத்திருக்கோம்...
சரியா...

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP