
கவிதைகளாலேயே என் உணர்வுகளைக் கொட்டித் தீர்த்த என்னை சினிமாத் தொடரில் இழுத்த றக்குவானை நிர்ஷன்,விக்கினேஸ்வரன்(வாழ்க்கைப் பயணம்),மற்றும் தமிழ்பறவை அண்ணா அவர்களுக்கும் என் எரிச்சல் கலந்த நன்றி.பார்த்தவுடன் முதலில் கேள்விகள் சீ...சினிமாவா என்று அலுக்க வைத்தது.
வேலைப்பளு...ஆரவாரமான பெரிய விடுமுறை.நேரம் பொன்னாக இருந்தது.விடுமுறையால் வர வீட்டில் விருந்தினர்.எப்படிக் கணணியில் ...?
நாட்டில் நிலைமை செய்திகளும் மன அலுப்பைத் தர மனம் ஈடுபாடு அற்று.இதோடு என் ஊர் சந்தியின் ஞாபகத்தோடு ஒரு புதிய வலைப்பூ ஒன்று தொடங்கலாம் என்றிருந்தேன்.அதைச் சினிமாத் தொடரோடு தொடங்க யோசித்தே இத்தனை பெரிய நேர இடைவெளி.
இனி...என் உப்புமடச் சந்தியில் பலதையும் பத்தையும் அலசலாம் வாங்கோ.
1)எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?
ம்ம்ம்...வயது சரியாக ஞாபகம் இல்லை இருந்தாலும் சினிமாவின் பெயர் ஞாபகமிருக்கிறது.நிறம் மாறாத பூக்கள்.யாழ்ப்பாணத் திரை அரங்கில் திரையிடப்பட்டது.திரைஅரங்கின் பெயரும் ஞாபகம் இல்லை,ஆனால் ஒன்று மாத்திரம் ஞாபகம்.படத்தில் சிங்கம்,புலி,கரடி எல்லாம் வரும் என்றுதான் என்னைப் பெற்றோர் கூட்டிச் சென்றார்கள்.சொன்னபடி எதுவும் வரவில்லை.எனது வீறிட்ட அழுகை.ஒரு முறை கிள்ளிப் பார்த்தார்கள்.முடியவில்லை.படம் முடிவதற்கு முன்பே வீடு திரும்பியாச்சு.
2)நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா?
அது 80 பது களின் பிற்பகுதிக் கோவில் வீதி,வாசிகசாலை,பள்ளிக்கூட சந்தி,விளையாட்டு மைதானம்,புறம்போக்கு காணி இவை எல்லாம் சினிமாக் கொட்டகை ஆன காலம்.அப்போது தான் நினைவு தெரிந்த சில சினிமாக்கள் பார்க்க முடிந்தது.எங்கள் வாழ்வில் அது"ஒரு கனாக் காலம்".இது ஒரு பட டைட்டிலாக இருந்தாலும் அது தான் உண்மை.அப்போது பார்த்த ஊமை விழிகள்,கண் சிவந்தால் மண் சிவக்கும்,வீரபாண்டிய கட்ட பொம்மன்,பாலம்
(சரி என நினைக்கிறேன்),ஹொனஸ்ட் நெட் போன்றபடங்கள் நினைவு தெரிந்து கண்ட முதல் சினிமாக்கள்.
3)என்ன உணர்ந்தீர்கள்?
அந்த வயதில் எதனையும் பெரிதாக உணர்ந்ததாக தெரியவில்லை ஆனால் இப்பொழுது நினைக்கும் போது எதனையோ உணர்ந்தது போல் இருக்கிறது.நிறையத் தவற விட்டது போலவும் இருக்கிறது.
4)கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
குருவி.அதற்காக விஜய் இரசிகை அல்ல சகோதரர் கேட்டதற்காக சுவிஸ் கூர் சினிமா அரங்கு சென்றேன்.படம் முடியும் வரை அண்ணன் ஒரு கோயில் என்பதற்காக என்ன கொடுமை சார் இது என்று நொந்தபடி பார்த்தேன்
5)கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது,எங்கே,என்ன உணர்ந்தீர்கள்?
இரண்டாம் தடவையாக கணணியில்"மொழி".உணர்ந்தது உணர்வுகளை பரிமாற மொழி தேவை.ஆனால் அன்பு என்பது உணர்வாக இருந்தாலும் அதற்கு மொழி தேவையில்லை என்பது.
6)மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
சிலநேரங்களில் சிலமனிதர்கள்,வீடு,முள்ளும் மலரும்,சிப்பிக்குள் முத்து,
குருதிப் புனல்,மஹாநதி,சேது,ஆட்டோகிராவ்,காக்க காக்க,நந்தா,பிதாமகன்,
வெயில்,கற்றது தமிழ்,அன்பே சிவம்,பருத்தி வீரன் இப்படி பல இதனை விட செருப்பு,பீ போன்ற குறும்படங்கள்.
7)உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
ஈழத்தவருக்கான கை கோர்த்திருக்கும் தமிழ் சினிமா உலகத்தவரின் போராட்டம்.
காப்டன் அடக்கி வாசிப்பது.
8)உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?
லைட்டிங்,கிராபிக்ஸ்,குசேலன் படத்தில் இறுதிக் காட்சியின் போதான லைட்டிங்,செல்வராகவன் படத்தில்(காதல் கொண்டேன்)லைட்டிங்,சங்கர் படத்தில் வரும் கிராபிக்ஸ்.எல்லாவற்றையும் விட கற்றது தமிழ் படத்தில் ஸ்ரில் லைட்டிங்.கமல் படங்களில் ஒப்பனைக்கலை.
9)தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
எப்போதாவது இன்டர்னெட்டில் வெள்ளாடு புல் மேய்வது போல.
சில நேரம் சலனம் சினிமா இதழ்.
10)தமிழ்ச்சினிமா இசை?
அப்பாடா...பின்னுறாங்கள்.ஒரு முறை புகையிரத நிலையம் அருகில் செவ்விந்தியர் மியூசிக் கேட்டேன் வசீகரா அப்படியே தெரிந்தது.வெளி நாட்டு வாழ்வு பல சந்தர்ப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.என்றுமே ராஜா ராஜா தான்.சில நேரங்களில் ஏ.ஆர்.ரஹ்மானின் வெள்ளைப் பூக்கள் அமைதிக்காக... தீயில் விழுந்த தேனா...பூங்காற்றிலே உன் சுவாசத்தைக் கேட்பதுண்டு.ஆனால் என்றுமே இசை ஞானி ராசைய்யா தான்.
11)தமிழ் தவிர வேறு இந்திய,உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா?
அதிகம் தாக்கிய படங்கள்?
பெரிதாகப் பார்ப்பதில்லை.ஆனால் சில படங்கள் பார்த்துள்ளேன்.
லகான்,வோட்டர்,சலாம் பொம்பே,அடூர் கோபால கிருஷ்ணன் படங்கள்.ஆங்கிலப் படமான குழந்தைப் போராளிகளை மையமாக வைத்து எடுக்கப்பட பிளட் டைமண்ட்.விடு முறையில் இலண்டன் சென்றபோது வாட்டர்லூ சினிமாவில் பார்த்த சிங்கள திரைப்படமான புரஹிந்த கழுவற
(ஒரு பெளர்ணமி இரவில்)போன்றவை குறிப்பிடத் தக்கவை.
12)தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
அப்படி எதுவும் இல்லை.
13)தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
எதிர்காலம் தொழிநுட்பத்தில் சிறப்பாக இருக்கும் என நம்புகிறேன்.இயக்குனர் இடை வெளி என்பது குறைந்துள்ளது.புதிய சிந்தனைகளுடன் பல இயக்குனர்கள் களம் இறங்குகிறார்கள்.புதிய பல சிந்தனைகள் திரையில் வருகின்றன.ஆனால் ஒரு உதாரணம் சேரனின் ஆட்டோகிராவ்வின் கதாநாயகனை ஒரு பெண்ணாகச் சேரனால் காட்ட முடியாமல் போனது.இன்னும் தமிழ் சினிமா சரியான முறையில் தடம் பதிக்கவில்லை என்பதையே காட்டுகிறது.
14)அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
சினிமா இல்லாத உலகத்தில் உலகம் பல சகாப்தங்களாக சந்தோசமாகவே இயங்கி வந்துள்ளது.கவலைப் பட பெரிதாக எதுவும் இல்லை.சினிமாவை ஏதாவதொன்று நிரப்பும்.அது தானே உலக நியதி.
இந்தச் சங்கிலித் தொடரைத் தொடர
திலீபனையும்,
ஈழத்துக் களத்துமேடு ஈழவனையும்,மெல்போர்ன் கமலையும்,
நேரம் கிடைத்தால் நிலாமுகிலனையும் கூப்பிடுகிறேன்.
ஹேமா(சுவிஸ்)