ஆதவா "எனக்குப் பிடித்த நபர்" ன்னு ஒரு விளையாட்டில் கோர்த்து விட்டாலும் விட்டார்.எனக்கு முழி பிதுங்கி...வெளியில் வராத குறைதான்.உண்மையில் எனக்குச் சங்கடமாகிப் போன விஷயமாகிவிட்டது.எனக்கு யாரை நிறையப் பிடிக்கும்?ம்ம்ம்...யோசிக்க யோசிக்க வரவே இல்லை.எல்லோரும் அவரவர் கொள்கையில் உறுதியில் நிலைப்பாட்டில் - அவர்களைப் பிடித்திருக்கிறது.
இராமரையும் பிடிக்கும்.இராவணனையும் பிடிக்கும்.கண்ணகியையும் பிடிக்கும்.மாதவியையும் பிடிக்கும் என்பதைப்போல.ஏன் சொல்லப்போனால் எங்கள் நாட்டு ஹிட்லர் ராஜபக்சவையும் பிடிக்கும்.தமிழனை அடிவேரோடு அழிக்கும் உறுதியான கொள்கையில்.
உலகப் பெரியவர்களை எனக்குப் பெரிதாகத் தெரியாது.ஆதவா அளவிற்கு நான் படித்து அறியவில்லை.வாய்ப்பும் கிடைக்கவில்லை.பொறுமை-
நேரமும் இல்லை.என்ன சொல்லி நான் எழுத?
முதலில் வீட்டில்,அப்பாவை நிறையப் பிடிக்கும்.என் தாத்தா(அம்மாவின் அப்பா)வைப் பிடிக்கும்.அவர் போல ஒரு மனிதனை நான் இன்றுவரை கண்டதில்லை.அவர் ஒரு தமிழ்நாட்டுத் தமிழர்.தவில் கலைஞர்.அவரது இந்திய மனைவி இறந்துவிட, கைக்குழந்தையோடு(மகன்) யாழ்ப்பாணத்துக்கு வந்து மறு திருமணம் செய்து கொண்டவர்.அன்பால்,ஆன்மீகத்தால்,பொறுமையால்,கலையால்
உயர்ந்தவர்.அவரது மூத்த மகன்தான்"வலங்கமான் சண்முகசுந்தரம்".தமிழ்நாட்டிலேயே
புகழ் பெற்ற தவில்வித்வான்.என் தாத்தா ஒருவர் கடவுள் போல.
என் சின்ன மாமா பிடிக்கும்.என் தம்பி பிடிக்கும்.இப்படி...இப்படி.
இன்னும் சொல்லப்போனால் எம்.ஜி.ஆர்,சிவாஜி,கமல் பிடிக்கும்.எஸ்.பி.பி,கே.ஜே,எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி பிடிக்கும்.
இனி உலகைச் சுற்றி எனக்குத் தெரிந்த அளவில் சொல்ல முனைகிறேன்.ஆதவா,நான் யாரிடமும் அடி வாங்காமல் இருந்தால் சரி.காப்பாத்த இப்போதைக்கு நீங்கள்தான்.
புத்தன் 
புத்தன் அவதாரமானான்.அவன் கொள்கைகள் அவதாரங்களுக்கானது.புத்தன்போல் எவரும் தானம் புரிந்த தில்லை.எங்கோ புத்தன் பற்றி ஒரு கதை படித்த ஞாபகம்.போதிமரப் புத்தன் முற்பிறவியில் அடர்ந்த கானகத்தில் புலிக் குகை கண்டதாயும்,தாய்ப் புலி இரை தேடப் போயிருந்த சமயம் குட்டிகள் பசியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்ததாயும்.பார்த்த புத்தன் பசிக்குக் கொடுக்கத் தன்னிடம் ஏதுமில்லை என்று வாருங்கள் குட்டிகளே,என் உடலைத் தின்று பசி தீருங்கள் எனக் குட்டிகளுக்கு இடையில் விழுந்துஉயிர் விட்டான் என்று.எனவே புத்தனின் போதனைகள் பிடிக்கும்.அந்த அமைதியான முகமும் மிகவும் பிடிக்கும்.
காந்தி

பகவத் கீதை,சமண சமய கொள்கைகள்,லியோ டால்ஸ்டாயின் எழுத்துக்கள் போன்றவற்றால் ஈர்க்கப்பட்ட காந்தி சத்தியம்,அகிம்சை ஆகிய கொள்கைகளைத் தன் வாழ்நாள் முழுவதும் விடாமல் கடைபிடித்தார்.அசைவ உணவுகளைத் தவிர்க்கும் வைணவ குடும்பத்தில் பிறந்த காந்தி
சிறு வயதில் புலால் உணவைச் சிறிது உண்டாலும் பின்னர் சைவ உணவையே,குறிப்பாகப் பழங்கள்,கடலை,ஆட்டுப்பால் போன்றவற்றையே உண்டு வாழ்ந்தார்.சைவ உணவே அசைவ உணவை விட மனித உடலுக்கு ஆரோக்கியமானது என்று தன் சோதனைகள் மூலம் அறிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.1902 ஆம் ஆண்டுக்குப் பிறகு,பிரம்மச்சரிய விரத்தையும் கடைபிடித்தார்.வாரத்திற்கு ஒருநாள் மௌன விரதம் மேற்கொண்டார். தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பியவுடன்,மேல்நாட்டு உடை அணிவதைத் தவிர்த்து இந்திய உடைகளையே அணியத் தொடங்கினார்.உள்நாட்டில் தயாரிக்கப்படும்
காதி உடையையே இந்திய மக்கள் உடுத்தவேண்டும் என்று அறிவுறுத்தினார்.எனவே காந்தித் தாத்தாவை,அவரது அகிம்சைப் போராட்டங்கள்,சுறுசுறுப்பு,பயப்படாத உறுதி பிடிக்கும்.
பெரியார் 
மதுவிலக்குக் கொள்கை முதன் முதலில் உருவாக்கப் பெற்றது பெரியார் அவர்களின் இல்லத்திலேயே.காந்தியார் ஈரோடு வந்து இவரது இல்லத்தில் தங்கயிருந்த வேளை குடிபோதைக் கணவர்களால் மிகக்கொடிய துன்புறுத்தலுக்கு உள்ளாகும் மனைவியரின் மனவலியைப் பற்றிப் பெரியாரின் துணைவியார் நாகம்மையாரும்,தங்கை கண்ணம்மாளும் அவரிடம் சொன்னார்கள்.மதுப் பொருள்களைத் தடை செய்யும் கொள்கையை வகுத்தே தீர வேண்டும் என்று அழுத்தமாக வலியுறுத்தினர்.இதற்காக ஒரு போராட்டத்தையே நடத்த வேண்டும் என்றும் வாதிட்டனர். போற்றத்தக்க இந்தக் கருத்தினை காந்தியார் உடனே ஏற்றுக் கொண்டார்.மதுவிலக்குக் கொள்கையை நடைமுறைப்படுத்துமாறு ஆங்கிலேயர் அரசை வலியுறுத்தி நாடு முழுவதும் காங்கிரசுக் கட்சியினர் கள்ளுக்கடை முன்னால் மறியல் செய்ய வேண்டும் என்று அறிவித்தார்.
மதுவிலக்குக் கொள்கையை நிலைநாட்ட காந்தியார் விடுத்த அந்தக் கட்டளையை நிறைவேற்றுவதற்காகத் தம்முடைய பரந்த தோப்புகளில் கள் உற்பத்திக்காக நின்ற 500-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களைப் பெரியார் வேரோடு வெட்டி வீழ்த்தினார்.
அந்த அளவுக்கு மதுவிலக்குக் கொள்கையிலும் உறுதியான பிடிப்புக் கொண்டிருந்தார் இவர். ஈரோடு நகரில் போராட்ட வீரர்களை வழிநடத்திச் சென்று கள்ளுக்கடை முன்னால் மறியல் புரிந்தார் பெரியார்.இவர் கைது செய்யப்பட்டு,ஒரு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார்.
மற்றும் புலவர்,வித்துவான் என்ற பெயரால் யார் வாழ்ந்தவராக,வாழ்பவராக இருந்தாலும் அவர்கள் பெரிய மதப் பற்றுள்ளவர்களாகவும், மதவாதிகளாகவும் இருந்து வருவது ஒரு சம்பிரதாயமாகவே ஆகிவிட்டதால் புலவர், வித்துவான் என்றால் மேலும் மூடநம்பிக்கைக் காரர்களாகவும் பிடிவாதக் காரர்களாகவுமே இருக்க வேண்டியவர்களாக ஆகிவிட்டார்கள்
தந்தை பெரியாரின் பொன்மொழிகள்!
*************************************************
மனித தர்மத்தை அடிப்படையாக வைத்து மனித சமுதாயத்திற்கு யாராவது தொண்டாற்ற வேண்டுமானால் முதலில் செய்யவேண்டியது பகுத்தறிவுப்படி மக்களை நடக்கச் செய்வதும் சிந்திக்கச் செய்வதுமே யாகும்.
மனிதன் தனக்குள்ளாகவேதான் மற்றவனைவிடத் பிறவியில் தாழ்ந்தவன் என்கிற உயர்வு தாழ்வு உணர்ச்சியைப் போக்கித் தன்னம்பிக்கையும்,சுயமரியாதையும் பெற வேண்டும்.
சீர்திருத்தமும்,சுயமரியாதையும்,சட்டம் கொண்டு வந்து,வாக்கு வாங்கி நிறைவேற்றப் பெற்றுவிடலாம் என்று நினைப்பது ஒரு நாளும் முடியாத காரியம்
மனிதன் உலகில் தன் சுயமரியாதையை - தன்மானத்தை உயிருக்குச் சமமாகக் கொள்ளவேண்டும்.
மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம்.
மானமற்ற ஒருவனுடன் போராடுவது சிரமமான காரியம்.
பாரதி

ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று பாரதி தீர்க்க தரிசியாய் 1908 இல் கனவு காணும் போது விடுதலை இயக்கத்தைப் பாரதிதாசன் ஒரு பாட்டில் நக்கல் புரிந்து கேலி செய்வதைப் பலர் அறியமாட்டார்கள்! கூண்டுக் கிளியைப் பற்றி எழுதும் போது பாரதிதாசன்,"அக்கா!அக்கா! என்றாய்.அக்கா வந்து கொடுக்க சுக்கா,மிளகா,சுதந்திரம் கிளியே?"என்று எள்ளி நகையாடுகிறார்!இதை நான் இங்கே குறிப்பிடு வதற்குக் காரணம் வரப்போகும் மெய்ப்பாடுகளை முன்கூறும் மகாகவிக்குரிய தீர்க்க தரிசனம்,மெய்ஞானம் பாரதிக்குத் தெளிவாக இருந்தது என்பதைக் காட்டுவதற்குத்தான்!
பாரதி பாரத விடுதலைப் போரின் ஆரம்ப காலங்களில்,அதைப் பாக்களில் முரசடித்துப் பறைசாற்றிய நாட்டுக் கவி।ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோ மென்று உறுதியாக நம்பிப் பாடிய விடுதலைக் கவி।ஷேக்ஸ்பியர்,காளிதாசர் போல அநேக நாடகங்கள் எழுதா விட்டாலும்,"பாஞ்சாலி சபதம்"என்னும் ஒரு நாடகக் காவியம் படைத்த ஓர் நாடகக்கவி।"ஆகா வென்று எழுந்தது பார் யுகப் புரட்சி..."என்று ரஷ்யப் புரட்சியைப் பாராட்டிய புரட்சிக் கவி."அச்சமில்லை...அச்சமில்லை அச்சம் என்பதில்லையே..." என்று படை வீரர்களுக்கு உச்ச சக்தி ஊட்டிய போர்க்கவி.கவிதையில் சிலேடை புகுத்திய நக்கல் கவி.கவிதையில் பாடல்களில் புதுமையாக இசையைப் புகுத்திய இசைக்கவி. திரைப்படங்களில் அவரது இனிய பாடல்கள் பல இடம் பெற்றுள்ளதால் அவர் ஒரு திரைக்கவி.வள்ளுவர்,ஒளவையாரைப் போல அறவழி காட்டும்"புதிய ஆத்திச்சூடியை" ஆக்கியதால் அவர் ஓர் அறக்கவி.பைரன்,ஷெல்லி போல காதல்,காமத்தை எழுதாவிட்டாலும்,பாரதியின் பாடல்களில் காதல் காவியச் சுவைகளைக் காண முடிகிறது.வறுமை,ஏழ்மை,தாழ்மை,கீழ்மை,பழமை,மடமை,பெண்மை ஆகியவற்றைப்
பற்றி உணர்ச்சியோடு பல பாக்கள் எழுதிய மானிடக்கவி.வீட்டுக் குள்ளே பூட்டி வைத்து அடிமைப்பட்ட பெண்களுக்கு விடுதலை அளித்துப் புதுமைப் பெண்களை உருவாக்கிய புதுமைக்கவி।ஜாதி,மதங்களைப் பாரோம் என்று மதச்சார்பற்ற பண்பைப் போதித்த மானிடக் கவி.தெய்வ நம்பிக்கை கொண்டு,சக்தியைப் பற்றிப் பல பாடல்கள் பாடிய பக்திக்கவி.
அவரது தோத்திரப் பக்திப் பாடல்கள் பல யாப்பிலக்கணப் பண்புகளைப் பின்பற்றியும் பல இசைக் கீதங்களாகவும் எழுதப் பட்டவை.கண்ணன் பாட்டில் பாரதி,கண்ணன் பிறப்பில் ஆரம்பித்துக் கண்ணனைத் தோழனாக,தாயாக,தந்தையாக,சேவகனாக,அரசனாக,
சீடனாக,குருவாக,குழந்தையாக,விளையாட்டுப் பிள்ளையாக,காதலனாக,காதலியாக, ஆண்டாளாக,குல தெய்வமாகக் காண்பது ஒரு புதுமுறைக் கவிதை ஆக்கம்.
சேகுவரா+காஸ்ரோ
பத்துமாதத்திற்கு ஒரு மாதம் முன்பே இந்த உலகை பார்த்த குழந்தை சேகுவேரா.இறுதிவரை ஆஸ்துமாவுடன் போராடியவன்,மருத்துவன்,தொழு நோயாளிகளுக்குத் தொண்டாற்றியவன்,மாணவனாக இருந்தபோதே பன்னிரெண்டு மாநிலங்களைச் சுற்றி வந்தவன்.கரும்புத் தோட்டப் பணியாளி,தொழில் சங்கத் தலைவராவதற்காக சுரங்கத் தொழிலாளியாக பணியாற்றியவர்,காஸ்ரோவின் பிரதான தளபதி,கியூபப் புரட்சியின் நட்சத்திரம்,குடியுரிமையையும்,அமைச்சர் பதவியையும் உதறிவுட்டு கங்கோலியாவில் புரட்சிக்காகப் புறப்பட்டவன் பதினாறு மாத காலம் பொலிவியாவில் போராட்டம் என
சுருக்கமாகக் கூறினாலும் அந்தப் போரளியின் வரலாறு இதனையும் தாண்டியது.
எண்பத்தியிரண்டு போரளிகளைச் சுமந்துகொண்டு புறப்பட்ட கிராண்மா படகில் தான் சேயின் வரலாறும் வீர வரலாறு ஆகிறது.கேலாரடோஸ் கரையில் படகு தரை தட்டி போராளிகள் கரை சேர்ந்ததுமே சுற்றி வளைக்கப்பட்டுத் தாக்குதலுக்கு உள்ளானார்கள்.அப்போது தான் சேயின் துப்பாக்கியில் இருந்து புறப்பட்ட சன்னம் பாட்டஸ்ட படை உறுப்பினர் ஒருவரை கொன்றது.இது தான் ஆரம்பம்.சே தலைமையிலான பதினெட்டு பேர் கொண்ட போராளிகள் குழுஆயுத பலம் பொருந்திய ஐம்பத்துமூன்று இராணுவத்தினரை மே மாத்ததில் எதிர்கொண்டு பாரிய வெற்றியை ஈட்டியது.இந்த தாக்குதல் போராட்டத்துக்கு ஆதரவாக நடுத்தர மற்றும் விவசாய மக்களை இணத்தது.போராளிகளில் மக்கள் நம்பிக்கை கொண்டார்கள்.
கியூபப் புரட்சிக்குப் பிரதான காரணகர்த்தா சேகுவரா.சேயுடன் காஸ்ரோ இணைந்து செயற்பட்டதனால் கியூபப் புரட்சி சாத்தியமாயிற்று.சே பின்னர் கியூபா பொருளாதார வளர்ச்சியிலும் பெரும் பங்காற்றினார்.
சொந்த மகனாக பாவித்து ஏற்றுக்கொண்ட கியூபா நாட்டினையும் உங்களையும் விட்டுப்பிரிகிறேன்!ஏகாதிப்பத்தியத்தை ஒழிக்க எனக்காகக் காத்திருக்கும் கடமைகளை நோக்கிச் செல்கிறேன்.உங்களைப் பிரிகின்றேன்.எனது குடும்பத்தைக் கியூபாவின்
பாதுகாப்பில் விட்டுச்செல்கிறேன்.என் வழியில் மரணம் வந்தால் அந்த
நொடிப்பொழுதும் என் எண்ணங்கள் உங்களையும் என் நண்பன் பிடல் காஸ்டிரோவையும் நினைத்துக் கொண்டிருக்கும்...!
ஏகாதிபத்தியத்தை நிர்மூலப்படுத்த வேண்டும்.அதற்கு ஒவ்வொன்றாக,சிறு சிறு கட்டமாக மக்களை விடுவிக்க வேண்டும்.எதிரியை அவன் பூமியில் இருந்து பெயர்த்தெடுத்து கடுமையான போராட்டத்திற்கு அழைக்க வேண்டும்.அவனுக்குச் சாதகமான பகுதிகளையும் முகாம்களையும் அழிக்க வேண்டும்."சே..."
நெல்சன் மண்டேலா
தென்னாப்பிரிக்காவில் இன ஒதுக்கல் கொள்கையை எதிர்த்துப் போராடியவர்; இனவெறி அரசால் இருபத்தேழு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்.நெல்சன் மண்டேலா.தென்னாப்பிரிக்க அரசின் இனவெறிக் கொள்கைக்கு ஆளான மக்களின் முதுகெலும்பை நிமிர்த்தியவர்.அவர்களின் நுரையீரல்களில் உரிமைக்காற்றை ஊதியவர்.அடிமைத் தளையை அகற்றியவர்.
அன்னை தெரேசா

சிறு வயது முதல் ஏழைகள் மீது அதீத அன்பு கொண்ட அன்னை தனது வாழ்க்கையை துறவறத்தில் செலுத்தினார்.பெற்றோர் இட்ட அக்னஸ் கோஞ்சே பெயாஜியு எனும் பெயரில் முதலில் ஆசிரிய தொழில் புரிந்து துறவர வாழ்க்கையை தொடர்ந்தார். இவரில் காணப்பட்ட ஆழ்ந்த இறை பற்றும்,பணிவும் கடவுளையே பிரம்மிக்க வைத்திருக்கின்றது என்று கூறினாலும் மிகையாகாது.1929 ம் ஆண்டு இந்தியா வந்த இவருக்து 1946ம் ஆண்டு ஒரு ரயில் பயணத்தினால் மனம் திசை திருப்பப்படுகின்றது. அப்போது தான் அவர் அந்த காட்சியை காண்கின்றார்.கால்கள் இரண்டும் ஊனமுற்று நடக்கமுடியாத நிலையில் இருக்கும் ஒரு அநாதை மனிதன்.அவனுக்கு உதவுவார் யாருமில்லை.அவனின் தாகம் தீர்ப்பார் யாருமில்லை.அவனைத் திரும்பி பார்ப்பார் யாருமில்லை.இவற்றைக் கவனித்த அன்னையின் உள்ளம் மிகுந்த வேதனையால் துடித்தது.அன்று முதல் அவரின் வாழ்க்கை பயணத்தில் ஒரு புதியதொரு திருப்பம் ஏற்பட்டது.தனது வாழ்க்கையை முழுமையாக ஏழைகளுக்கு அர்ப்பணிக்கவும் அவர்களுக்காக வாழவும் தயாரானார்.இப்போது முதல் தெரேசா எனும் பெயரில் அடையாளமானார்.
இந்தியாவில் கல்கத்தா எனும் பிரதேசத்திலேயே ஒரு சிறு குடிசையில் இனம் மதம் ஜாதி என்ற பேதங்களை தூக்கியெறிந்துவிட்டு தனது சேவையை ஆரம்பித்த அவர் அங்கு வீதியோரங்களிலும் சேரிகளிலும் வாழ்ந்த ஊனமுற்றவர்கள் நோயாளிகள் அனாதைகள் என்று குழந்தைகள் முதல் முதியோர் வரையிலான அனைவருக்கும் ஒரு புது ஒளி கொடுக்கும் அன்னையானார்.தனக்கென எதனையும் எதிர்பார்க்காத அவர் தன்னை நம்பி இருக்கும் உயிர்களின் பசியையும் தாகத்தையும் போக்க அந்நகரில் வாழும் செல்வந்த பெரியவர்களிடம் சென்று கையேந்தலானார்.முரட்டுக் கொளரவம் நிறைந்து பணம் எனும் ஆசையில் வாழ்ந்து கொண்டிருக்கும் இவர்களால் வெறுப்பும் முகச்சுழிப்புக்களுமே நன்கொடையானது.இருந்த போதிலும் அன்னை சற்றும் மனந்தளராமல் அன்போடும் பெருமையோடும் அவற்றை ஏற்றுக்கொண்டார்.
இவ்வாறு ஒரு முறை அன்னை செல்வந்தர் ஒருவரிடம் சென்று தனது இரு கைகளையும் ஏந்தியவாறு ஏழைகளுக்கு ஏதாவது தரும்படி கேட்டார்.அதற்கு அந்த வீட்டு எஜமான் வீட்டின் மேல் மாடியில் நின்று கொண்டு அன்னையின் கைகளில் எச்சி உழிழை துப்பி அது தான் நான் உனக்கு தருவது,இனி கரைச்சல் கொடுக்காமல் போ....என்று மிகுந்த ஆணவத்துடன் கூறினான்.அதற்கு அன்னை எவ்வித கவலையும் கொள்ளாமல் புன்சிரிப்போடு ஏற்றுக்கொண்டு பெரியவரே இது நீங்கள் எனக்கு தந்தது மிகவும் நன்றி.ஆனால் பசியால் தாகத்தால் பாடும் இந்த மக்களுக்கு வேறு ஏதாவது தாருங்கள்.என்று மீண்டும் கேட்டார்.அவரின் இந்த செயலால் அவரில் காணப்பட்ட தாழ்மை,பணிவு பொறுமை,இரக்கம் போன்ற நல்ல குணங்களை அம் மனிதன் அந்த நிமிடமே மனமாறி அன்னையோடு இருந்தவர்கள் அனைவருக்கம் பல வழிகளிலும் உதவி புரியத் தயாரானார்.இவ்வாறு அன்னையின் நற்குணங்களால் பலர் மனம்மாறி அவரோடு இருக்கம் ஏழை மக்களுக்கு உதவிசெய்தார்.
குறிப்பாகச் சொல்லப்போனால் முஸ்லிம் மக்கள் கூட இல்லங்களை அமைக்க உதவி புரிந்தனர்.நாளுக்கு நாள் அவமானங்களையும் சோகங்களையும் சோதனைகளும் ஏறபட்டாலும் தனது சேவையில் தன்னை முற்றுமுழுதாக அர்ப்பணித்தார்.இவர் தனக்கென இரண்டு ஆடைகள் மட்டுமே வைத்திருந்தார்.அந்த உடைகள் கூட ஏழைகளின் அடையளமாகத்தான் காணப்பட்டது.இவ்வாறு அன்னையின் சேவை ஒவ்வொரு நிமிடமும் அதிகரித்துக்கொண்டே சென்றது.அன்னையின் இந்த அன்புக்காகவே பல ஆயிரம் உள்ளங்கள் ஏங்கின.
ஆறுமுகநாவலர்

"தமிழ் சைவம் இரண்டும் என் இரு கண்கள்.அவ்விரண்டும் ஒளி குன்றாமல் இறுதிவரை காத்துப் பயன் கொள்வதே என் கடன்.அவை வாழப் பணி புரிவதே என் வாழ்வின் குறிக்கோள்" என வாழ்ந்தவர் தவத்திரு ஆறுமுகநாவலர் அவர்கள்.
இலங்கை ஈழத்தில் போர்த்துக்கீய,டச்சு,ஆங்கிலேய காலனி ஆதிக்கங்களாலும்,அவற்றின் ஆதரவில் முடுக்கி விடப்பட்ட சில கிறிஸ்துவ மிஷனரிகளின் இந்து,சைவ சமய எதிர்ப்பு பிரசாரங்களும் யாழ்ப்பாணம் நல்லூர் ஆறுமுக நாவலரை சைவ சமய எழு ஞாயிறாகத் தோன்றச் செய்தன.ஈழத்தில் சைவ சமயமே மிகப் பழமையானது.
பெரும்பான்மையானது.
ஆங்கிலக் கல்வியும்,அதன் வழி அரசு ஊழியப் பெரும் வாய்ப்பும், சைவ சமய உண்மை
நெறி அறியா அறியாமையும் மேலோங்கி இருந்த சூழலில் சைவசமயம்,"பிழைக்குமோ"
என்ற பேரச்சம் பரவிய காலத்தில் யாழ்ப்பாணம் நல்லூரில் ஆறுமுக நாவலர் 18.12.1822 இல் கந்தப்பிள்ளை - சிவகாமி அம்மையார் தம்பதிகளுக்கு இறுதி மகவாகப் பிறந்தார்.
பதின்மூன்றாம் வயதிலேயே சைவ சமயத்தின் வீழ்ச்சியைத் தடுத்து அருள்புரிய சிவபெருமானிடம் பிரார்த்தனை செய்து ஒரு வெண்பாவை இயற்றியதாக அவருடைய வரலாற்றை 1916-இல் எழுதிய யாழ்ப்பாணம் நல்லூர் த.கைலாசபிள்ளை குறிப்பிட்டுள்ளார். அந்த வயதில் ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணம் வெஸ்லியன் மத்திய பாடசாலையில் ஆங்கிலம் கற்று வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அவர் தமிழ் இலக்கிய இலக்கணச் சித்தர் சாத்திரங்கள்,சிவாகமங்கள் கற்றவர். ஆங்கிலத்திலும் ஸமஸ்கிருதத்திலும் வல்லவர்.சிவனடியை மறவாத சிந்தனையாளர். உரைநடை கைவந்த வல்லாளர்,நல்லாசிரியர்,நூலாசிரியர்,உரையாசிரியர்,பதிப்பாசிரியர்; சொல்லின் செல்வர்,தனக்கென வாழாத் தகைமையாளர்,தவக்கோலச்சீலர்,இல்லறம் ஏற்காது நற்பணி செய்தவர்.
அவர் இயற்றிய நூல்கள்: 23
உரை செய்தவை: 8
பரிசோதித்துப் பதிப்பித்தவை: 39
யாத்த பாடல்கள்: 14
விவிலிய நூலுக்குச் சிறந்த மொழிபெயர்ப்புச் செய்தது,திருக்குறள் பரிமேலழகர் உரையை முதலில் பதிப்பித்தது,பெரிய புராண வசனம் எழுதியது அவருடைய பெருமைக்குச் சான்று பகர்வன.அவர் இயற்றிய சைவ வினா விடை,பாலபாடம் இன்றும் போற்றப் படுபவையாகும்.
யாழ்ப்பாணத்திலும்,சிதம்பரத்தில் மேலவீதியில்,சைவப்பிரகாச வித்தியாசாலை (1864) (தற்போது மேல்நிலைப் பள்ளி) சென்னையில் வித்தியானுபாலன அச்சியந்திர சாலை (1860) ஆகியவற்றை நிறுவியவர்.சிதம்பரம் ஞானப்பிரகாசர் திருக்குளம் வடகரையில்,அவருடைய விருப்பப்படி சேக்கிழார் கோயில் நிறுவப்பட்டது (1890).
திருவாவடுதுறை ஆதீனத் தலைவர் ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் அவர்களால் 'நாவலர்' பட்டம் பெற்றவர் (1865).
"தமிழ்க்குலம் உலகப்புகழ் எய்தத் தாழாதுஞற்றுங்கள் அதொன்றே எனக்குத் தமிழர் செய்யும் கைம்மாறு". - ஆறுமுக நாவலர்.
எனக்குப் பிடித்தவர்கள் இவர்கள் எல்லோருமே ...எங்கோ எப்போதோதான் இப்படிப்பட்ட மனிதர்கள் தெய்வங்களை மனிதன் நேரடியாகக் காண்பதற்காகப் பிறந்திருப்பார்கள்.இன்று என் வாழ்நாள் காலங்களில் நான் கண்டதாகவே இல்லை.நிறையப்பேர் இருக்கிறார்கள். பேரும் புகழும் உச்சத்தில் பறக்க,சுய நலத்தோடு வெள்ளை வேட்டியோடு அலையும் மனிதர்களைப் பார்க்கிறேன்.எனவேதான் எங்களுக்கு வழிகாட்டியாக இருந்த இவர்களைப் போன்றவர்களை நிறையப் பிடிக்கும்.
போதுமா ஆதவா?இந்தப் பதிவைப் பின் தொடர
கமல்,கவின்,கடையம் ஆனந்த்,மேவி வாங்கோ...வாங்கோ.
ஹேமா(சுவிஸ்)