Thursday, March 05, 2009

கூதல் மாலை-கவிதை சொல்லும் கதை.

குளிருக்குப் பயந்து
ஒதுங்கிய பகலவன்.
இருட்டின் அரசாட்சி.
பனி மூடிய மலைகள்
வழிய வழி இல்லை.
நாட்கள் விறைத்தபடி.
காற்றில் ஈரம் இறுகி
பனிப் பாதையாகி,
வழுக்கி வழுக்கி
தெருவில் திரிவதோ
செப்படி வித்தையாய்.

நான் சுவிஸ் ல் இருப்பதால் பனி கொட்டும் அனுபவம் அதன் அழகு,அதன் அவஸ்தையும்தான் இந்தக் கவிதையில்.இங்கு ஐப்பசி மாதம் தொடக்கம் சித்திரை
வரை பனி கொட்டும் காலங்கள்.இந்தக் காலங்களில் வானம் ஓரளவு வெளிப்பாக
இருக்குமே தவிர சூரியனைக் காணக் கிடைக்காது.சிலசமயங்களில் ஒரு சில நிமிடங்கள் அதிசயமாய்.அந்தியில் 4-4.30க்கே இருட்டிவிடும்.வெயிலோ வெப்பமோ இல்லாததால் மலைகளோ,மரங்களோ,பாதைகள் எங்குமே பனியின் ஆட்சிதான்.பனி கால்புதைந்து
நடக்கும் அளவிற்குக் கொட்டும்.அது அப்படியே இறுகினால் வழுக்கோ...வழுக்கென்று வழுக்கும்.(ஐஸ்பெட்டிக்குள் கவனித்திருப்பீர்களே.)பெருந்தெருக்களில் வாகனங்கள் வழுக்காமல் ஓடுவதற்காகவும்,நடைபாதைகளில் நடந்து செல்வதற்கு வசதியாகவும் ஒருவகையான உப்புத் தூவுவார்கள்.வாகனங்கள் ஓடும் வெப்பத்தில் பெருந்தெருக்களில்
பனி படர்ந்திருக்காது.கரைந்திருக்கும்.என்றாலும் நடைபாதைகள் அப்பப்பா...செப்படி வித்தைதான்.இவ்வளவையும்
இந்தப் பந்தி சொல்கிறது.

உடைகள் பாதணிகள் பாரமாய்
மனம் அதைவிட கனமாய்.
என்றாலும் ஓர் இதம்
பனியின் உறைதலில்.
பனி கிழித்து
சாணகம் தெளித்து
கோலம் வரைய நினைக்கிறேன்.

எத்தனை உடைகள் போட்டு முகமூடி மனிதர்களாய்,அப்பலோவுக்குப் போகிறவர்கள்
போல எம்மையே ஓர் பொதி போலத்தான் கட்டி உடைகள் போட வேணும்.பனி வழுக்காமலும்இகாலில் குளிர் பிடிக்காமலும் இருக்க பாரமான விஷேசமான சப்பாத்துக்கள்,கையுறைகள் என்று எம் உடம்பைவிட 5-6 கிலோ மேலதிகமான பாரங்கள் சுமக்க வேணும்.அதோடு எங்கள் வேதனைகளின் பாரமும் இருக்கும்.என்றாலும் குளிர் முகத்தில பட ஒரு சுகம்தான்.நடக்கும்போதே மனம் சந்தோஷமாக இருந்தால் கோடுகள் கிழித்துக் கோலம் போட்டுகொண்டே நடக்கலாம்.அப்போது ஒரு ஆசைதான்.சாணகம் தெளித்துக் கோலம் போடலாமோ என்று.

நிமிடங்கள் சேமித்து
ரசிக்க மறுக்கும்
தெருப்பாடகனின் பாடலாய்,
அவரவர்க்கான
அவசர அழைப்புக்களாய் அலுவல்கள்.
கம்பளிப் பூச்சிகளாய் சிறுவர்கள்.
பூச்சாண்டி மனிதர்கள்.

இந்த இடத்தில் ஆதவாவின் மிகுந்த சந்தேகம்.ஒரு நல்ல தெருப்பாடகன் பாடிக்கொண்டிருப்பான்.அதைக் கவனிக்கக் கூட நேரம் இருக்காது.ஒன்று குளிரில் நின்று ரசிக்க முடியாது.அடுத்து அவ்வளவு அவசர உலகம்.நிமிடங்கள்கூட வீணாகமல் சேமித்தபடி வாழ்க்கை.குழந்தைகள் கம்பளி உடைகளில் அழகாய் இருப்பார்கள்.பெரியவர்கள் அசல் பூச்சாண்டிகள் போலத்தான்.முகத்தில் மூக்குக் வாயும் கண்ணும் மட்டுமே தெரியும்.

பனி ரசித்து
பார்வைகள் கண்ணாடி உடைக்கும்
படியோடு நடை நிறுத்தும்
பூனைக்குட்டிகள்.

இங்கு பூனை,நாய்கள் வீட்டு வளர்ப்புப் பிராணிகள்.என்றாலும் தங்கள் தங்கள் வீடுகளோடு மட்டும்.(எல்லாம் வீட்டுக்குள்தான்.)பூனையைக் கொஞ்ச நேரங்கள் வெளியில் விடுவார்கள்.
என்றாலும் குளிர் காலங்களில் பூனைகள் வெளியே போகாமல் வீட்டுப் படிகளோடு கண்ணாடிக்குள்ளால் பார்த்தபடி நிற்கும்.

புகைத்தல் தடை
என்றாலும்,எல்லோருமே புகைத்தபடி.
மதுக்கடை வியாபார அமளி.
குருவிகள் காக்கைகள் எங்கே.
புறாக்கள் தவிர
பறப்பன கண்ணில் இல்லை.
பனிபூண்ட வெள்ளை மரங்கள்.

குளிர் கூடிய காலங்களில் வாயால் மூக்கால் மூச்சின் புகை பறக்கும்.அதுதான் புகைத்தல் தெருவில் தடை...ஆனாலும்.மதுக்கடைகள் வியாபாரம்,அதுவும் வெள்ளி,சனிக்கிழமைகளில் அமளி துமளிதான்.

உண்மையில் குளிரில் ஒரு சிறு பூச்சி,புளுக்களைக் காணக் கிடைக்காது.ஈ,
இலையான் எதுவுமே இருக்காது.காக்கா குருவிகள் தெரியாது.எங்கேயாவது போய்விடுமாக்கும்.எங்கேயாவது ஒன்றிரண்டு பறப்பதைக் காணலாம்.ஒன்று
தெரியுமா உங்களுக்கு.இங்கு காக்கா,குருவிகள்,நாய்,பூனை எல்லாமே
இங்குள்ளவர்கள் போலவே அளவோடுதான் குரல் தரும்.எங்கள் நாடுகள் போலக் கத்திக்கொண்டேயிருக்காது.புறாக்கள் மட்டும் எப்பவும்போல குளிருக்குள்ளும் வாழ்ந்துகொண்டிருக்கும்.எங்களைப் போலவோ!

உருக் கொடுத்து உடைபோட்டு
கண்ணாடி அணிவித்த
மதிலோர பனி மனிதர்கள்.

சொந்தமாக வீடு வைத்திருப்பவர்கள் வீட்டு வாசலில் இரு பக்கத்திலும் பனிமனிதன் செய்து உடை அணிவித்து கண்ணாடி போட்டு அழகு படுத்தியிருப்பார்கள்.(ரசனை உள்ளவர்கள் மட்டும்.)


துன்பம் மழித்து
தோளில் தூக்கா
வெள்ளை மனிதர்கள்.

எதையும் இலேசாக மனதிற்குள் போட்டு அழுந்தாமல்(பாசம்,பந்தம்,பிரச்சனைகள்,நோய்,வயது,தேவைகள்...)வாழ்வை இரசனயோடு வாழும் வெள்ளை இனத்தவர்கள்.(ஒரு விதத்தில் சரி என்றாலும்,ஒரு விதத்தில் பற்றே இல்லாமல் வாழும் வாழ்க்கை.)

ம்ம்ம்...
எங்கள் இருப்புக்கள்?
யுகங்கள் வேண்டும்
வெளுத்த வாழ்வுக்கு.

நாங்கள்,அதுவும் பொதுவாகத் தமிழர் அவர்கள் மனநிலைமையில் வாழ...பலகாலங்கள் ஆகும்.ஒருவேளை அப்படி ஒரு மனநிலையே வராது.அப்பா,அம்மா,பிள்ளைகுட்டி,
பக்கத்து வீட்டுக்காரன்,உறவுகள்,நாடு,வீடு என்றே பாசங்களைப் பிய்த்துப்போட்டுவிட்டு அவதிப்பட்டுக் கொண்டிருப்போம்.பிறந்த பச்சைக் குழந்தையை பக்கத்து அறையில் தூங்கப் போட்டுவிட்டுத் தூங்கும் அப்பா,அம்மா.அதேபோலவே 14-15 வயதில் தன்னைத் தானே பாதுகாத்துக்கொண்டு தனியாக வாழப் பழகிக்கொள்ளும் பிள்ளைகள்.அப்பா அம்மாவை தேவை தினங்களோடு,நேரம் கேட்டு,தேநீர்ச் சாலைகளில் சந்திக்கும் பிள்ளைகள்.
பிற்காலத்தில் வயோதிபர் மட வாழ்க்கை.வெளுத்த வாழ்வை ரசித்தாலும் சிலசமயங்களில் சீ....என்று ஆகிவிடும்.

குளிரூட்டி இல்லாமல்
குளிரின் விறைப்பில்
பனியின் முகத்தை
பார்த்து ரசிக்க இலகுவாய்.
பறவை இறக்கையில்
மெத்தென்ற போர்வைக்குள்
குடங்கி முடங்கி
நானே என்னைக் கட்டிய தூக்கம்.
ரம்மியக் கலவியில்
குளிர் ஒரு கவிதையாய்.



குளிரூட்டி இல்லாமல் வெளியில் நடக்கும் போதுதான் குளிரை முழுமையாக அனுபவிக்க முடியும்.அந்த ரம்யமே ஒரு சுகம்.இங்கு போர்த்துவதற்கென்றெ பறவைகளின் மெல்லிய இறக்கைகளால் போர்வைகள் (மெத்தைபோல ஆனால் கொஞ்சம் மெலிதாக)தைத்திருப்பார்கள்.அதைத்தான் குறிப்பிட்டிருக்கிறேன்.பறவைகளின் இறக்கைகளால் ஆன போர்வைகள் நிறைந்த வெப்பத்தைத் தரும்.என்றாலும் எல்லோருக்கும் இதன் சுவாத்தியம் ஒத்துக்கொள்வதில்லை.ஒவ்வாமையைக் கொண்டுவரும்.கூடுதலாகத் தும்மலில் தொடங்கி பீனிசம் என்கிற தும்மல் வருத்ததையே உண்டாக்கிவிடும்.இதனால் இலவம் பஞ்சினால் தைக்கப்பட்ட போர்வைகளும் பாவனைக்கு இருக்கிறது.குளிர் காலத்தில் வேலைக்குப் போக அலாரம் எழுப்பினாலே மணிக்கூட்டுக்குத்தான் தலையில் அடி.ஏனென்றால் அப்படித் தூக்கம் தூக்கமாய் வரும்.அவ்வளவு இதமாய் இருக்கும் தூக்கமும்-அதைத் தரும் படுக்கைகளும்.உண்மையில் குளிர் ஒரு குட்டிக் கவிதைதான்.நான் ரசித்து அனுபவிக்கிறேன்.

பல கால ஆசை
பனி திரட்டி உருட்டிய மனிதன்
கை அளைந்த வண்ணமாய்.
வந்த புதிதில்
பனியை...
சுவைத்ததும் ரசித்ததும்
திருட்டுத்தனமாய்,
சிரிப்பாய் எனக்குள் இப்போ !!!


இப்போ நினைத்தாலும் எனக்குச் சிரிப்பு வரும்.நான் சுவிஸுக்கு வந்த காலத்தில் வந்ததும்,ஒரு கார்த்திகை மாதம்தான்.அப்போ பூப் போல வானில் இருந்து ஏதோ வெள்ளையாய் கொட்டி நிலத்தை மூடும்.எனக்கோ அதிசயம்.யன்னலுக்குள்ளால் வியப்போடு கண் விலகாமல் பார்த்துக் கொண்டிருப்பேன்.அந்தச் சமயங்களில்தான் மற்றவர்கள் அறியாமல் வாயில் வைத்தும் பார்ப்பேன்.ஆனால் அது இப்போ சர்வ சாதாரணம்.நாங்கள் மழை நீர் எடுப்பது போல கிராமப் புறங்களில் வெளியான இடங்களில் பனியைப் பாத்திரங்களில் சேமித்துப் பாவிப்பார்கள்.

அதேபோல சிறுவர்கள் பனியை உருட்டி எறிந்து விளையாடுவார்கள்.தெருவில் நடப்பவர்கள்,வாகனங்கள் மீதும்.இந்தச் சமயங்களில் இந்த விளையாட்டைக் கோபப்பட்டுப் காவல்துறையினரிடம் புகார் செய்ய முடியாது.ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.வேணுமானால் நாங்களும் திருப்பி எறிந்து விளையாடலாம்.

இன்னும் ஒன்று சொல்ல ஆசை.குளிர் காலங்களில் வாகனங்களின் மேலே எங்கள் ஊரில் சவப்பெட்டிகள் கட்டிக் கொண்டு போவது போல நிறையக் காணலாம்.அதுவும் பெரும் தெருக்களில் நிறையவே காணலாம்.நான் நினைப்பதுண்டு...என்னடா ஒருநாளில் அடிக்கடி இவ்வளவு மனிதர்கள் இறந்திருக்கிறார்களே என்று.பிறகுதான் தெரியும்.அது பனி சறுக்கி விளையாடுபவர்கள் கொண்டு செல்லும் விளையாட்டு உபகரணங்கள் என்று.இதே நேரம் கை கால்களை முறித்துக்கொண்டு கைத்தடியோடு நிறையப் பேர்களைக் காணலாம். இதையும் பாவங்கள் இந்த நாட்டில் இத்தனை ஊனமுற்றவர்களா என்று பரிதாபப் பட்டிருக்கிறேன்.பிறகுதான் தெரியும்.அது தற்கால ஊன்றுகோல் என்று.

ஆதவா,கவிதைக் கருவே புரியவில்லை என்று சொல்லப்போக,நான் குளிர்காலத்தைப்
பற்றி என் அனுபவங்களயே சொல்லிவிட்டேன்.சமயம் வரும்போதுதானே
மனமும் வாய் திறக்கிறது.

அனுபவச் சிலிர்ப்போடு ஹேமா(சுவிஸ்)

20 comments:

Anonymous said...

me the first

ஹேமா said...

ஆனந்த்,உப்புமடச் சந்தியிலும் கொஞ்சம் குளிர்.சமாளிச்சுக்கோங்க.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

தயாராய் இருங்க மேடம். உங்களுக்குப் போட்டியா உச்சிவெயிலில்.. அப்படி ஒரு இடுகை போடுகிறேன். அதில் எங்கள் ஊர் தட்ப வெப்பநிலை பற்றி அனுபவப் பூர்வமாக எழுதப் போகிறேன்

நசரேயன் said...

//பனியின் உறைதலில்.
பனி கிழித்து
சாணகம் தெளித்து
கோலம் வரைய நினைக்கிறேன்.
//

வேணா பனிக் கோலம் போடுங்க

கீழை ராஸா said...

பதிவில் பார்வை பதிக்கும் போதே இதயம் குளிர்கிறது...

ஒருவரி விமர்சனம்
-------------------
சில்ல்லல்ல்ல்லென்று ஒரு பதிவு....

ஆதவா said...

இப்போத்தான் எல்லாம் விளங்குது!!! என்ன காரணம்னா, நான் மிதமான பனியில்தான் மிதந்திருக்கிறேன்.. பனிக்கட்டிகளோடு விளையாடும் அளவுக்கு வாய்ப்பு அமையவில்லை.. அதனால்தான் அதை சரியாக உள்வாங்கவில்லை.. மேலும் என் கவிதை வட்டங்கள் ஒரு அளவுக்குள் சுருங்கி இருப்பதுவும் ஒரு காரணம்.

சந்தேகங்கள் தீர்ந்தது என்றாலும் ஒன்றே ஒன்று!!!

நிமிடங்கள் சேமித்து

ரசிக்க மறுக்கும்

தெருப்பாடகனின் பாடலாய்,

இந்த இடத்தில் நீங்கள் சொல்லியிருக்கும் விளக்கம் " ஒரு நல்ல தெருப்பாடகன் பாடிக்கொண்டிருப்பான்.அதைக் கவனிக்கக் கூட நேரம் இருக்காது.ஒன்று குளிரில் நின்று ரசிக்க முடியாது.அடுத்து அவ்வளவு அவசர உலகம்.நிமிடங்கள்கூட வீணாகமல் சேமித்தபடி வாழ்க்கை." என்று சொல்லியிருக்கிறீர்கள்... ஆனால் கவிதையின் வார்த்தைகள் எதைக் குறிப்பிடுகிறது பாருங்கள்..

ரசிக்க மறுக்கும் தெருப்பாடகனின் பாடல் என்பது தெருப்பாடகனைக் குறிக்கிறது.. இரண்டு முரண்பட்ட வரிகள்..... முதலாவது
நிமிடங்கள் சேமித்து//// இது தெருப்பாடகன் சேமிக்கும் நிமிடங்கள்...
ரசிக்க மறுக்கும்/// பாடகன் பாட, அதைக் கேட்க அல்லது ரசிக்க மறுக்கும்....

ஒருசில விஷயங்கள் எனக்குப் புதியதாக இருக்கின்றன... குளிர்காலத்தில் பறவைகளைப் பற்றியதும்... புகைப்பது குறித்தும்... பனி உருட்டி ஆடுவது,,.. புதியது!!! எனக்கு!!!!

எனக்காகவே விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி சகோதரி!!!!

தமிழ் மதுரம் said...

ஹேமா அப்ப நீங்கள் புலவரோ:_))

சும்மா பகிடிக்கு?
விளக்க உரை அருமை?

அப்ப எதிர் காலத்திலை புலத்திலை இருந்தும் தமிழ் வளருமாம்?????????????/

ஹேமா said...

SUREஷ்,பாவம் நான்.என் கூடப்போய் போட்டி போடுறீங்களே.
சரி...சரி.குளிரை எவ்ளோ ரசிச்சு எழுதியிருக்கேன்.போட்டோவெல்லாம் தேடி எடுத்து.ஒண்ணுமே சொல்லாம!

ஹேமா said...

நசரேயன்,சாணகத்தில போடுற கோலம் ஒரு அழகுன்னா,
பனிக்கோலம் இன்னொரு அழகு.நீங்களும் அமரிக்கால போட்டிருப்பீங்கதானே!

ஹேமா said...

//கீழை ராஸா...ஒருவரி விமர்சனம்
-------------------
சில்ல்லல்ல்ல்லென்று ஒரு பதிவு..//

கீழை ராஸா,சில்லுன்னு மனசுக்கு சந்தோஷமா ஒரு பின்னூட்டம் நன்றி.

ஹேமா said...

//ஆதவா ...
இப்போத்தான் எல்லாம் விளங்குது!!!//

ஆதவா,கமலும் கவினும் யாழ்ப்பாணத் தமிழ் சொல்லிக் குடுத்திட்டாங்கள் போல!//

இது தெருப்பாடகன் சேமிக்கும் நிமிடங்கள்...
ரசிக்க மறுக்கும்/// பாடகன் பாட, அதைக் கேட்க அல்லது ரசிக்க மறுக்கும்...//

இல்லையே ஆதவா,கேட்பவர்கள்தான் தங்கள் நேரத்தைச் சேமித்துக்கொண்டு ஒரு நல்ல பாடலைக்கூடக் கேட்காமல் ஓடுகிறார்கள்.ஒன்று அவசர உலகம்.அல்லது குளிருக்குள் செலவு செய்ய விரும்பாத நிமிடங்கள்.

ஹேமா said...

கமல்,தமிழ் புலத்திலும் வாழும்.உங்களை...எங்களைப்(தமிழில் பற்றோடு) போன்றவர்கள் வாழும்வரை.

ஹேமா said...

மகா,மிகவும் நன்றி.நான் வந்தேன் உங்கள் பதிவின் பக்கம்.வழக்கில் வழுக்கிய தமிழும்,தில் தில் கதையும் படித்தேன்.ஆனால் பின்னூட்டம் என்னால் போட முடியவில்லை.
நீங்கள் வைத்திருக்கும் பின்னூட்ட முறைக்கு என் கணணியால் பின்னூட்டம் இட முடியாது.அதுதான்.

Muniappan Pakkangal said...

I really envy you.You are in a nice place Hema.Now only i know the reason for ur Kavithai.Ungalukku pottiya Vairamuthuvai angei anuppi vaikkattumaa.

தேவன் மாயம் said...

http://www.muthukamalam.com/muthukamalam_tamilvalaipo49.htm///

இந்த இதழில் உங்கள் பதிவு,என் பதிவு வ்ந்து உள்ளது!!

தேவன் மாயம் said...

http://www.muthukamalam.com/muthukamalam_tamilvalaipo49.htm//

இதுதான் முழு முகவரி

நட்புடன் ஜமால் said...

பயங்கர குளிர் ...

ஹேமா said...

முனியப்பன்..உங்களுக்கென்ன !குளிருக்குள் நாங்கள் அவதிப்படுவது உங்களுக்கு ரசிப்பு.

நான் சும்மா...உண்மைதான்,பனியும் ஓர் அழகு.இயற்கையின் ஓர் கொடுப்பனவு.வைரமுத்து சிலசமயம் ஏற்கனவே எழுதியிருப்பார்.
என்றாலும் கேட்டுப் பார்த்து அனுப்பி வையுங்களேன்.

ஹேமா said...

தேவா,நன்றி.நான் ஆசையோடு தேடினேன்.காணவில்லையே!

ஹேமா said...

ஜமால்.ரொம்பக் குளிரா?
எழுத்தே குளிர்ந்தால்...!

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP